நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முக்கிய திட்டம் குறித்து வரும் 13-ம் தேதி அறிவிப்பு வெளியாகிறது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ளதால் தற்போதைய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும். தோ்தல் முடிந்த பிறகு முழு பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும். இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று தொடங்கி நடைபெற்றது. சில மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டத்திற்கு பின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறுகையில், தொழில்துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 34 ஆயிரத்து 237 கோடி மதிப்பில் முதலீடு மற்றும் 55 ஆயிரத்து 96 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் பணியை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். தமிழக அரசின் முக்கிய திட்டம் குறித்து வரும் 13-ம் தேதி அறிவிப்பு வெளியாகிறது. வரும் 12-ம் தேதி கருத்தரங்கில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.