முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 389 பக்தர்களுக்கு அரசு மானியமாக ரூ.1.17 கோடிக்கான காசோலைகளை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

2025–2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் தேவஸ்தானத் திருக்கோயில்களுக்கு அரசு மானியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றிடும் வகையில், திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு 13 கோடி ரூபாயிலிருந்து 18 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு 8 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாகவும் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 6 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாகவும் உயர்த்தி, அதற்கான காசோலைகளை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகிகளிடம் வழங்கினார். மேலும் நடப்பாண்டில் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட தகுதி வாய்ந்த 389 பக்தர்களுக்கு அரசு மானியமாக தலா ரூ. 30,000/- வீதம் 1.17 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் முனைவர் துரை. இரவிச்சந்திரன், பொ.ஜெயராமன், கோ.செ. மங்கையர்க்கரசி, சி. கல்யாணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.