முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2 ஆயிரம் வழங்கியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து அரசின் மாத ஓய்வூதிய உதவி தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் என கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம். நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2,000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளோம். இதன்படி பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என மொத்தம் 29 லட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவி தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம். அது மட்டுமின்றி மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடி தடை கால உதவி தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோ 2 ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்த தருணத்தில் மீண்டும் ஒரு முறை சூளுரைக்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.