மதுரை: விஜயதசமி திருநாளை முன்னிட்டு, பள்ளி முன்பருவக் கல்வி மற்றும் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்காக அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், விஜயதசமி நாளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக வரும் குழந்தைகளை எவ்விதத் தடையுமின்றி சேர்க்கை செய்ய வேண்டும் என்றும், பெற்றோர்களிடமிருந்து எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில் தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி) மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் மாணவர் சேர்க்கைப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, தொகுத்து அறிக்கையாக அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படவில்லை என்ற புகார் எழாத வகையில், அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தயாளன் தெரிவித்துள்ளார்.