மதுரை: சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை (Guideline Value) பதிவுத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக நிர்ணயிக்கவோ, உயர்த்தவோ அதிகாரம் இல்லை என்றும், அதற்கான அதிகாரம் உரிய மதிப்பீட்டுக் குழுவுக்கே உள்ளது என்றும் மதுரை கிளை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அதனால் இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த M/s. Abdul Kalam Science Farmers People Security Association ஆபேல் மூர்த்தி மற்றும் காசிமாயன் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 11.06.2026 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
பதிவுத்துறை சார்பில் சில சொத்துகளின் வழிகாட்டி மதிப்பு தன்னிச்சையாக உயர்த்தப்படுவதாகவும், ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரும் கூடுதல் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக குறிப்பிட்ட சம்பவங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.
பதிவு செய்யும் நேரத்தில் கூடுதல் முத்திரைத்தாள் கட்டணம் கேட்க முடியாது
ஒரு சொத்தின் சந்தை மதிப்பு ஆவணத்தில் சரியாக குறிப்பிடப்படவில்லை என பதிவாளருக்கு சந்தேகம் ஏற்பட்டால், ஆவணத்தை பதிவு செய்த பின்னர், உரிய சந்தை மதிப்பையும் முத்திரைத்தாள் கட்டணத்தையும் நிர்ணயிக்க Collector (Stamps) அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
பதிவு செய்யும் நிலையிலேயே அதிக மதிப்பை நிர்ணயித்து கூடுதல் முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்த பதிவுத்துறை அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் அதிகாரம் யாருக்கு?
தமிழ்நாடு முத்திரைச் சட்டத்தின் பிரிவு 47-AA மற்றும் 2010-ம் ஆண்டு விதிகளின்படி, சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டுதல்களை நிர்ணயித்தல் மற்றும் திருத்துதல் ஆகியவை Valuation Committee மற்றும் அதன் கீழ் அமைக்கப்படும் Valuation Sub-Committee மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் அமைக்கப்படும் மதிப்பீட்டு துணைக் குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் தலைவராக இருப்பார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர், துணைப் பதிவுத்துறை தலைவர், சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்ட 9 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
விவசாய நிலங்களின் மதிப்பை நிர்ணயிக்க பல்வேறு அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்
விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் போது நிலத்தின் வகை, மண் வகை, அருகிலுள்ள நிலங்களின் மதிப்பு, பயிர் மற்றும் சராசரி விளைச்சல், சாலை மற்றும் சந்தைக்கு உள்ள தூரம், நீர்ப்பாசன வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டும்.
அதேபோல் வீட்டுமனை நிலங்களுக்கு சாலை, ரயில் நிலையம், பேருந்து வழித்தடம், சந்தை, மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், சுற்றுப்புற வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனைப் பின்பற்றாமல் மாவட்ட பதிவாளர் தனிப்பட்ட முறையில் ஒரு சொத்தின் மதிப்பை நிர்ணயித்தால், அந்த நடவடிக்கை சட்டப்படி செல்லாது என்றும் நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்த தீர்ப்பை தற்போதைய வழக்கிலும் சுட்டிக்காட்டியுள்ளது.
3 ஆண்டுகளுக்கு பிறகு குறைவு முத்திரைத்தாள் கட்டணத்தை வசூலிக்க முடியாது
ஆவணம் பதிவு செய்யப்பட்ட பிறகு உரிய முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தப்படவில்லை அல்லது குறைவாக செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்தால், சட்டப்படி விசாரணை நடத்தி குறைவான கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால், அந்த விசாரணை ஆவணம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட வேண்டும். 3 ஆண்டுகள் கடந்த பின்னர் இதுபோன்ற குறைவு முத்திரைத்தாள் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க சட்டத்தில் அனுமதி இல்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே சட்ட நிலைப்பாடு தெளிவாக இருப்பதால் இந்த வழக்கில் தனியாக புதிய உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என தெரிவித்த நீதிபதிகள், பதிவுத்துறை அதிகாரிகள் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள சட்ட விதிமுறைகளை முறையாகவும், முழுமையாகவும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.