மதுரை, ஆக.20: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் வரலாறு, தொன்மை மற்றும் பண்பாட்டு சிறப்புகளை அடுத்த தலைமுறையினருக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அருங்காட்சியகத்தையும், தமிழ் கலாச்சார மையத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, தமிழ் மண்ணின் பாரம்பரியம், வீர விளையாட்டுகள், கலை மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்து காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள மையத்தின் செயல்பாடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு, பார்வையாளர்களுக்கான வசதிகள், குடிநீர், கழிப்பறை, தூய்மை, வாகன நிறுத்தம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

சுற்றுலா வளர்ச்சியையும், ஜல்லிக்கட்டு விளையாட்டின் சிறப்பையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் நோக்கில், சுற்றுலாத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் இந்த ஆய்வை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் காலங்களில் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிடும் முக்கிய சுற்றுலாத் தலமாக கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை மேம்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகளும் ஆய்வின்போது கவனம் பெற்றன.

தமிழர்களின் வீர மரபை உலகுக்கு எடுத்துக்காட்டும் ஜல்லிக்கட்டு அரங்கம், அதனுடன் இணைந்துள்ள அருங்காட்சியகம் மற்றும் தமிழ் கலாச்சார மையம் ஆகியவற்றை சிறப்பாக பராமரித்து, சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம், கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கம் மதுரையின் முக்கியமான பண்பாட்டு மற்றும் சுற்றுலா அடையாளமாக மேலும் உயர்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) காமராஜ், மதுரை வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.