சென்னை: 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-க்கு முன்பிலிருந்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தனித் தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்தார். ந்தத் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்தன. இதனையடுத்து, ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தீர்மானத்தின் விவரம்: தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் 23.8.2010 ஆம் தேதியிட்ட அறிவிக்கையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இது 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் வாழ்வாதார உரிமையை பாதிக்கும் செயலாகும். எனவே இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்ட கால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாடு பள்ளிகளில் 23.8.2010 க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் நீண்ட கால பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்த விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

இதற்கு ஏற்ப இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் பிரிவு 23ல் உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு 23.8. 2010க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டபூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வழியாக இது தொடர்பாக தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.