புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மேப்பூதகுடி வழியாகச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவால் தேங்கிய நீரில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சட்டப்பேரவையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கவன ஈர்ப்பு உரையாற்றினார்.
மேப்பூதகுடி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் அடிக்கடி கசிவு ஏற்பட்டு, தண்ணீர் குளம்போல் தேங்கி பொதுமக்களுக்கு நீண்ட காலமாக சிரமம் ஏற்பட்டு வந்ததாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், காளப்பனூரைச் சேர்ந்த முத்தழகு என்பவரது மகனும், 6-ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுவனுமான மகதீப், அப்பகுதியில் குளம்போல் தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கியபோது, சற்று ஆழமான பகுதியில் சகதிக்குள் கால் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். மூச்சுத்திணறிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் முத்துராஜா தெரிவித்தார்.
குடிநீர் குழாய் கசிவு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியிருந்த நிலையை உரிய நேரத்தில் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த கோர விபத்தைத் தவிர்த்திருக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், சம்பவத்திற்கு காரணமான நிர்வாக அலட்சியம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில், காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகளை உடனடியாக கண்டறிந்து சீரமைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அரசு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.