மானாமதுரை: மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 6 போலீஸார் மீது கொலை வழக்குப் பதிந்துள்ளதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருஷ்ண ராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிஷன். கடந்த மார்ச் 5-ம் தேதி இரவு மானாமதுரை சீயோன் நகரில் ஏற்பட்ட தகராறில் இருவரை வெட்டிய வழக்கில் ஆகாஷ் டெலிஷனை போலீஸார் கைது செய்தனர். அப்போது காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில்தான் உயிரிழந்தாகக் கூறி அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், பிரேதப் பரிசோதனையில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. காவல் ஆய்வாளர் திலீபன் உள்பட 6 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, சிபிசிஐடி போலீஸார் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். ஆனால், குற்றவாளிகள் குறித்த விவரம் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் மகேந்திரன், காளீஸ்வரன், தெய்வேந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 68 நாட்களுக்குப் பிறகு நகல் வழங்கியதாகவும், அதிலும் 12 பக்கங்கள் மட்டுமே இருப்பதாகவும், விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் முழுமையாக வழங்கவில்லை என்றும் ஆகாஷ் டெலிஷன் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.