திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் மாண்புமிகு முதலமைச்சரின் புகைப்படம் வைப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் திடீர் திருப்பமாக, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆதாரங்களுடன் மறுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கடந்த 22.5.2026 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாண்புமிகு முதலமைச்சரின் புகைப்படம் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூட்டுறவுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, முதலமைச்சரின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்தை செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதன் அடிப்படையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலமைச்சர் புகைப்படத்தை பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இதற்காக கூட்டுறவுத்துறையின் சார்பில் தனியாக எந்தவொரு கடிதமோ அல்லது ஆணையோ கூட்டுறவு சங்கங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையால் தெரிவிக்கப்பட்ட அச்சகங்களில் கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக பணம் செலுத்தி புகைப்படங்களை பெற்றுக்கொண்டதாகவும், எந்தவொரு கூட்டுறவு சங்கமும் புகைப்படங்களை கொள்முதல் செய்து மற்ற சங்கங்களுக்கு வழங்கவில்லை என்றும் கூட்டுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளிலும் முதலமைச்சரின் புகைப்படங்கள் சுமார் ரூ.800 அளவிலேயே அந்தந்த துறை களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பில்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், ரூ.300 மதிப்புள்ள முதலமைச்சர் புகைப்படம் ரூ.800-க்கு வாங்கப்பட்டதாக கூறப்படும் புகார் எந்த அடிப்படையில் எழுந்தது? அதற்கான ஆதாரம் என்ன? என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
ஒருபுறம் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் புகைப்படங்களை கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக பணம் செலுத்தியே பெற்றதாகவும், கூட்டுறவுத்துறை சார்பில் எந்த கொள்முதலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளதால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, வி.அம்மாபட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் மிகப்பெரிய முறைகேடு தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நடவடிக்கைகளை திசைதிருப்பும் நோக்கத்துடன் முதல்வர் புகைப்படம் தொடர்பான பொய் புகார் எழுப்பப்பட்டுள்ளதாக முறைகேடு தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கை தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுமள்ளனர்.