மாஸ்கோ: ரஷ்யாவில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ.வின் தலைவர் ஜான் ரெட்கிளிப் ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவதற்கு, அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. இதனால் ரஷ்யா அமெரிக்கா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை டிரம்ப் விதித்தார். இதனிடையே, ஈரான் மீதான போரில் டிரம்ப் கவனம் செலுத்தி வருவதால், ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதலை அவர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, ரஷ்யாவின் வனுகோவா விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கி உள்ளது பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது. இந்த விமானம் போயிங் சி -17 குளோப்மாஸ்டர் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது. அமெரிக்க விமானப்படை பணியாளர்கள், ராணுவ உபகரணங்கள் மற்றும் சரக்குகளை நீண்ட தூரம் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம் ஆகும்.

விமான பயண கண்காணிப்புத் தரவுகளின்படி, அந்த விமானம் லாட்வியா தலைநகர் ரீகாவில் இருந்து காலை 8 :50 மணிக்கு கிளம்பி 10 மணிக்கு ரஷ்யா வந்தடைந்தது. விமானம் ரஷ்யாவில் தரையிறங்கியதற்கான காரணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. விமானத்தில் என்ன இருக்கிறது யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் தெரியவில்லை.ரஷ்யாவும், அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் மவுனம் காத்துவருகின்றன. அமெரிக்க விமானம் தரையிறங்கியதற்கான காரணம் ஏதும் தங்களிடம் இல்லை என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த விமானத்தில் சிஐஏ தலைவர் ஜான் ரெட்கிளிப் வந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. அவர் ரஷ்ய தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. சிஐஏ தலைவராக அவர் பொறுப்பு ஏற்ற பிறகு ஜான் ரெட்கிளிப் ரஷ்யா வருவது இதுவே முதல்முறையாகும்.