புதுடெல்லி: “டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் நேற்று (ஜூலை 20) பேரணி நடைபெற்றது. அனுமதி அளிக்கப்படாத நிலையில் நடைபெற்றதால் பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேரணியில் ஈடுபட்டவர்கள் போலீஸார் மீது கற்களை வீசினர். இதில், போலீஸார் சிலர் காயமடைந்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தன.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மாணவர்கள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் சபாநாயகரிடம் கோரினோம். ஆனால், அவர் இது குறித்து விவாதம் நடக்க வேண்டுமானால், அதற்கான அனுமதியை நான் அரசிடம் இருந்து பெற வேண்டும் என்று கூறுகிறார். எங்களிடம் இதை வெளிப்படையாகவே அவர் கூறினார். நேற்று நடைபெற்ற சம்பவத்துக்காக பிரதமர் மோடி இதுவரை மன்னிப்பு கூட கோரவில்லை. நமது நாட்டின் கல்வி முறையும் தேர்வு முறையும் சீர்குலைந்துவிட்டது. தேர்வு முறையை கரையான் அரித்துவிட்டது. இதைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. நாட்டில் இன்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. ஒரு கதவைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு போட்டித் தேர்வுகள்தான். அதையும் சீர்குலைத்துவிட்டார்கள்.

கல்வி முறையை மேம்படுத்த முனைவதற்குப் பதிலாக, தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளிவைப்பதற்குப் பதிலாக அரசு வேறு எதையோ செய்கிறது. முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும், மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்று அமித் ஷா ராஜினமா செய்ய வேண்டும், அவருக்கும் மேலே இருக்கும் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.