மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 17.09.2026 அன்று திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் விழா நடைபெறும் பகுதிகளில் அன்னதானம், பிரசாதம், சர்பத், குளிர்பானங்கள், நீர்மோர், இனிப்புகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்குவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அன்னதானம் மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். உணவுகளில் செயற்கை நிறமிகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் சேர்க்கக்கூடாது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அன்னதானம் வழங்குவதற்கு வாழை இலை, பாக்கு மட்டை அல்லது தொன்னை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். உணவு தயாரிப்பில் தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதுடன், அவற்றின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியையும் சரிபார்க்க வேண்டும்.
அன்னதானம் வழங்கப்பட்ட பின்னர் உருவாகும் கழிவுகளை முறையாக சேகரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் சேர்க்க வேண்டும். தற்காலிகமாக அமைக்கப்படும் குளிர்பான விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் இலவச குடிநீர் பந்தல்களிலும் தரமான, செயற்கை நிறமிகள் இல்லாத உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
ரூ.100 கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்
திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானம், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்க விரும்புவோர், https://foscos.fssai.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து, மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி (பதிவுச் சான்றிதழ்) பெற்ற பின்னரே உணவு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் பிரிவு 58-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களை தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் எண் 94440 42322 மூலம் தெரிவிக்கலாம்.
மேலும், அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான கூடுதல் விவரங்களுக்கு 0452-2640036 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.