மீனம்பாக்கம்: திருவனந்தபுரத்துக்கு பயணிகள் விமானம் மூலமாக சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து அமைச்சர் விஸ்வநாதன் புறப்பட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கல்லூரி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், உணவகங்கள், நூலகங்கள் மற்றும் சுற்றுச்சுவர் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பிணையின்றி ரூ.20 லட்சம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். முன்பெல்லாம் மாணவர்கள் கையெழுத்திட்டால் ரூ.4 லட்சம் வரையிலும், பெற்றோர் கையெழுத்திட்டால் ரூ.7.50 லட்சம் வரையிலும் கல்விக் கடன் கிடைத்தது. தற்போது பிணையின்றி ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பது உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இதுதொடர்பாக உயர்கல்வி துறை அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகள் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். எனவே, அனைத்து உயர்கல்வி மாணவர்களுக்கும் கல்விக் கடன் நிச்சயமாக கிடைக்கும். அவற்றை உறுதி செய்ய, உயர்கல்வி அமைச்சகம் முழுமூச்சுடன் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.