மதுரை, செப். 9:

மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

வேளாண் பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், வேளாண் இயந்திர சக்தியின் அளவை அதிகரிக்கவும், வேளாண் பணிகளை குறைந்த செலவில் உரிய காலத்தில் மேற்கொள்ளவும், வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நவீன மற்றும் உயர் தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பிரபலப்படுத்தவும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம், வேளாண்மைப் பொறியியல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கவும், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

இதன்படி, டிராக்டர், பவர் டில்லர், பவர் வீடர், நெல் நடவு இயந்திரம், சுழல் கலப்பை, புதர் அகற்றும் கருவி, தென்னை மட்டை தூளாக்கும் கருவி, வைக்கோல் கட்டு கட்டும் கருவி, எளிதில் நகர்த்திச் செல்லக்கூடிய கால்நடைக் கொட்டகை மற்றும் மின்சார பம்புசெட்டுகளுக்கான தொலைவிலிருந்து இயக்கும் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 408 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், ரூ.484.22 லட்சம் மதிப்பில் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுத்தளமான Agri Stack Tamilnadu Farmer Registry-ல் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் மட்டுமே வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற விண்ணப்பிக்க முடியும்.

தனிப்பட்ட சிறு, குறு விவசாயிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளின் பங்களிப்புத் தொகையைக் குறைத்து உதவும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், விசைகளையெடுக்கும் கருவி மற்றும் தட்டை வெட்டும் கருவி ஆகியவற்றை வாங்குவதற்கு பொதுப்பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும்.

உழவர் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்ட விவசாயிகள் தங்களது கைப்பேசியில் “உழவர் செயலி (Uzhavar App)”-ஐ பதிவிறக்கம் செய்து ஒருமுறை பதிவு (One Time Registration) மேற்கொள்ள வேண்டும். பின்னர், “வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு” → “வேளாண்மைப் பொறியியல் மானியத் திட்டங்கள்” என்ற பிரிவில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தேவையான இயந்திரம் அல்லது கருவிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 8-ஆம் தேதி கணினி குலுக்கல் (Computer Randomization) முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். தொடர்ந்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர்.

இலக்கு எட்டப்படாத நிலையில், அதே மாதம் 15 முதல் 21-ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம். 22-ஆம் தேதி மீண்டும் கணினி குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும்.

எனவே, மதுரை மாவட்ட விவசாயிகள் உழவர் செயலி மூலம் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து, வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கூடுதல் விவரங்களுக்கு

மதுரை: உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம்,

எண்.60, டி.பி.கே. ரோடு, மதுரை – 625011.

தொலைபேசி: 7708884126

உசிலம்பட்டி: உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம்,

ஒழுங்குமுறை விற்பனைக் கூட வணிக வளாகம், மதுரை மெயின் ரோடு, உசிலம்பட்டி – 625532.

தொலைபேசி: 9443148364