மதுரை, செப்.9: உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகர காவல்துறையும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, புது மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன CCTV கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,மற்றும் மாநகர காவல் ஆணையாளர் திரு.ராஜேந்திரன், ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட அதிநவீன CCTV கேமராக்கள் மற்றும் முகம் கண்டறியும் FRS கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
காவல்துறைக்கு கலெக்டர் பாராட்டு!
ஆய்வின்போது கேமராக்களின் காட்சித் தரம், ஒளிப்பதிவு திறன், கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு மற்றும் களப்பணியாளர்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் விழாவில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ள தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டினார். குறிப்பாக CCTV, FRS மற்றும் நேரடி கண்காணிப்பு மூலம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சந்தேகத்திற்குரிய நபர்களை உடனடியாக கண்டறியவும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகத்துக்கு கமிஷனர் பாராட்டு!
அதேபோல், குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் மற்றும் காவல்துறைக்கு வழங்கப்பட்டு வரும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் பாராட்டினார்.
காவல்துறையின் பாதுகாப்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து துறை சார்ந்த ஒத்துழைப்பும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக வழங்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் பக்தர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
160 அலுவலர்கள் 24 மணி நேர கண்காணிப்பு!
செப்டம்பர் 10 முதல் 17-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் வகையில் காவல்துறை, மாநகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 10 முக்கிய துறைகளைச் சேர்ந்த 160 அலுவலர்கள் சுழற்சி முறையில் கட்டுப்பாட்டு அறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புது மண்டப கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 51 LED திரைகள் மூலம் கோயில் வளாகம் முழுவதும் ஒரே இடத்தில் கண்காணிக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசல், பாதுகாப்பு உள்ளிட்ட களநிலவரங்களை உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க 300-க்கும் மேற்பட்ட வாக்கி-டாக்கி கருவிகள் களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
பேருந்து நிலையங்களிலும் நேரடி ஒளிபரப்பு!
பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி குடமுழுக்கு நிகழ்வுகளை காணும் வகையில் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் LED திரைகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
பக்தர்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதுடன், குடமுழுக்கு விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.