மதுரை மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தியைப் பெருக்கவும், கிராமப்புற விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் 'ஆவின் மினி டைரி திட்டத்தின்' (Aavin Mini Dairy Scheme) கீழ், தகுதியுடைய 40 விவசாயிகளுக்கு 4% வட்டி மானியத்துடன் கூடிய யூனியன் வங்கி மூலம் 1.08 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவி காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,
வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியை உயர்த்தி ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் தேவையை பூர்த்தி செய்வதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் ஆகும்
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் குறைந்தபட்சம் 4 கலப்பினக் கறவை மாடுகள் (ஜெர்சி இனம்) வாங்குவதற்கு தலா ரூ.2.70 இலட்சம் கடனுதவி 4% வட்டி மானியத்துடன் வழங்கப்படுகிறது. இக்கடன் தொகை இரண்டு தவணைகளாக (முதல் தவணையாக 2 மாடுகளுக்கு ரூ.1.35 இலட்சம் மற்றும் 6 மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் தவணையாக 2 மாடுகளுக்கு ரூ.1.35 இலட்சம் விவசாயிகளுக்கு விடுவிக்கப்படுகிறது.
இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக, கடந்த ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களிலேயே ஆவின் மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 84 விவசாயிகளுக்கு தலா ரூ.2.70 இலட்சம் வீதம் கடனுதவி அனுமதிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வழக்கமான வங்கிக் கடன் நடைமுறைகளில்
ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்து, பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக ஆவின் நிறுவனம் பரிந்துரை செய்து, மிகக் குறுகிய நாட்களிலேயே விவசாயிகளுக்கு இக்கடன் எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி கறவை மாடுகளை வாங்கி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதோடு, மாவட்டத்தின் பால் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
உதவி ஆவின் பொதுமேலாளர் (பால் கொள்முதல் மற்றும் உள்ளீடு) மரு. நந்தகோபால் அவர்கள் தெரிவிக்கையில்,
தமிழக அரசு ஆவின் உற்பத்தியாளர்களுக்கு ஏற்கனவே 41 ரூபாய் விலை உயர்வு அறிவித்திருந்தது. இந்த விலை உயர்வு போதுமானதாக இல்லை என உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கத்தினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சென்றடைந்ததைத் தொடர்ந்து கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாய் என இன்றைய தினம் 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இதன் மூலமாக உற்பத்தியாளர்கள் கறவை மாடுகள் அதிக அளவில் வாங்கி அதன் மூலம் பால் ஆவினுக்கு வழங்குவதன் மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் ஒன்றியத்திற்கு இதன் மூலமாக பால் கொள்முதல் அதிகரிக்கும். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் திரு. பி.கணேஷ் தெரிவித்ததாவது:
“என்னிடம் ஏற்கனவே இரண்டு கறவை மாடுகள் உள்ளன. கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினேன். இதற்காக கடந்த ஆறு மாதங்களாக
பல்வேறு வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்தும், கடன் நடைமுறைகள் நீண்ட காலம் எடுத்ததுடன், இறுதியில் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆவின் மூலம் கடன் பெறுவதற்கான வாய்ப்பு குறித்து அறிந்து விண்ணப்பித்தேன். ஆவின் அலுவலர்களின் உதவியுடன் நான்கு நாட்களுக்குள் கடன் நடைமுறைகள் முடிக்கப்பட்டன. இதன்மூலம் இரண்டு கறவை மாடுகளை வாங்கியுள்ளேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு மேலும் இரண்டு கறவை மாடுகளை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் எனது பால் உற்பத்தியும் வருமானமும் அதிகரிக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் உதவிய ஆவின் நிர்வாகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
செல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் திருமதி கே.சாந்தா தெரிவித்ததாவது:
“என்னிடம் முன்பு பல கறவை மாடுகள் இருந்தன. குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக அவற்றை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு கறவை மாடுகளை வாங்கினோம். மேலும் மாடுகளை வாங்க விரும்பியபோதும் வங்கிக் கடன் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தன.
எங்களது சிரமங்களை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஆவின் நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரிவித்தோம். ஆவின் அலுவலர்களின் வழிகாட்டுதலுடன் விண்ணப்பித்து, ஒரு வாரத்திற்குள் கடன் பெற முடிந்தது. இதன்மூலம் மீண்டும் எங்களது கால்நடை வளர்ப்பை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் ஆவின் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
சிறு பால் பண்ணைத் திட்டத்தின் மூலம் பால் உற்பத்தியாளர்களின் கால்நடை எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பால் உற்பத்தி மற்றும் அவர்களின் குடும்ப வருமானமும் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, ஆவினுக்கான பால் கொள்முதலும் அதிகரிக்க வழிவகுக்கிறது.
இந்நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் முத்துமாதவன், உதவி ஆவின் பொதுமேலாளர் (பால் கொள்முதல் மற்றும் உள்ளீடு) மரு. நந்தகோபால் பால்வளத்துறை துணைப் பதிவாளர் இரணியன், கூட்டுறவு சங்க பதிவாளர் சரணாரியம்மாள், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் பிராந்திய மேலாளர் சாபுமோன் மற்றும் ஆவின், யூனியன் வங்கியின் உயர் அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.