மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு சேவை நிறுவனங்களிலும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30-ம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு **சிறப்பு உணவு பாதுகாப்பு ஆய்வு (Special Drive)** நடைபெறுகிறது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையரின் உத்தரவின்படியும், மதுரை மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படியும் இந்த சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி மதுரை மாவட்டத்தில் செயல்படும் **உணவகங்கள், ஓட்டல்கள், உணவுக்கூடங்கள், விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள், சமையல் அமைப்பாளர்கள் (Caterers), தெருவோர உணவு விற்பனையாளர்கள், தேநீர் கடைகள் மற்றும் சிறிய உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள்** உள்ளிட்ட அனைத்து உணவு வணிக நிறுவனங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அனைத்து உணவு வணிகர்களும் செல்லுபடியாகும் **FSSAI உரிமம் அல்லது பதிவு சான்றிதழ்** பெற்றிருக்க வேண்டும். உரிய உரிமம் அல்லது பதிவு இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்களின் ஆய்வுப் பட்டியலை (Inspection Checklist) பதிவிறக்கம் செய்து, தங்களது நிறுவனங்களில் சுய தணிக்கை மேற்கொண்டு குறைபாடுகளை முன்கூட்டியே சரிசெய்ய வேண்டும். ஆய்வின்போது **Self Audit Report** வைத்திருக்க வேண்டும்.
சமையலறை, உணவு சேமிப்பு பகுதிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மையாகவும், எண்ணெய் உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுவதாகவும் இருக்க வேண்டும். பூச்சி மற்றும் எலி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
உணவு கையாளும் அனைத்து பணியாளர்களும் **மருத்துவத் தகுதிச் சான்றிதழ்** பெற்றிருக்க வேண்டும். மேலும், FOSTAC (Food Safety Training and Certification) பயிற்சியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணியாளர்கள் தலைக்கவசம், கையுறை, முகக்கவசம் மற்றும் சுத்தமான ஏப்ரன் ஆகியவற்றை அணிந்து பணியாற்ற வேண்டும். பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அதனை FSSAI அங்கீகரித்த RUCO முகவர்களிடம் ஒப்படைத்து, அதற்கான பதிவுகளை பராமரிக்க வேண்டும்.
செயற்கை நிறமிகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. செய்தித்தாள் போன்ற அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவுப் பொருட்களை பொட்டலமிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. சமையலறையில் தரமான மற்றும் துருப்பிடிக்காத கத்திகள் மற்றும் வெட்டும் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆய்வின்போது உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது **உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006**-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநில மற்றும் மத்திய அரசுகளால் உரிமம் பெற்ற உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
### பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
உணவு மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் **[https://foodsafety.tn.gov.in/](https://foodsafety.tn.gov.in/)** என்ற இணையதளம் மூலமாகவும், **94440 42322** என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பதிவு செய்யலாம்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விதிமீறல்கள் இருப்பின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.