மதுரை: மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் உரங்களின் தரம் குறித்து தொடர்ந்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் அனுமதியுடனேயே தரமற்ற அல்லது போலி உரங்கள் சந்தையில் புழக்கத்தில் விடப்படுகின்றனவா? என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் போலி உர விற்பனை தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், மதுரை மாவட்டத்திலும் உர விற்பனையின் பின்னணியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சிவனின் பெயரைக் கொண்டதாக கூறப்படும் ஒரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி, சில தனியார் உர நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறாரா? என்ற குற்றச்சாட்டு விவசாயிகள் மற்றும் உர விற்பனைத் துறையினரிடையே பேசுபொருளாகியுள்ளது.
தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வழக்கமான ஆய்வுகள் முறையாக நடைபெற்றிருந்தால், தரமற்ற உரங்கள் விவசாயிகளிடம் சென்றது எப்படி? மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தால் அவற்றின் ஆய்வு முடிவுகள் என்ன? விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன.
மேலும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டதாக கூறப்படும் புகார்கள் உண்மையா? அப்படியானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் பணத்தையும் விளைச்சலையும் நேரடியாக பாதிக்கக்கூடிய உரங்களின் தரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமிருக்கக் கூடாது. எனவே, மதுரை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட உரங்களின் மாதிரி பரிசோதனை முடிவுகள், தோல்வியடைந்த மாதிரிகள், விதிமீறிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
போலி உர விற்பனைக்கு அதிகாரிகளின் துணையா?
தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டது யார்?
உரங்களின் தரக்கட்டுப்பாடு உண்மையிலேயே நடந்ததா?
என்ற கேள்விகளுக்கு மாவட்ட வேளாண்மைத் துறை மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிப்பார்களா? என்பதே தற்போது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.