மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சிற்றுந்து (மினி பஸ்) உரிமையாளர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வந்த வாகன நிறுத்தத் தகராறு, அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுமூகமாக முடிவுக்கு வந்தது.
கடந்த 2000-ஆம் ஆண்டு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, அரசுப் பேருந்துகளுக்கு இணையாக சிற்றுந்துகளும் குறிப்பிட்ட நடைமேடைகளில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல சட்டப்பூர்வ உரிமை பெற்றுள்ளன. ஒரு ஆட்டோ ஒரு நபரின் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள நிலையில், ஒரு சிற்றுந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் என சுமார் 10 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாக சிற்றுந்து உரிமையாளர்கள் தரப்பில் வலிமையாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்தச் சிக்கல் குறித்து சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை ,வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சித்ரா மற்றும் சிங்காரவேலன், மற்றும் காவல் போக்குவரத்து உதவி ஆணையர் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிற்றுந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கண்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள், ஆட்டோ தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையின் போது சிற்றுந்து சங்கத் தலைவர் கண்ணன் தனது வாதங்களை நேர்த்தியாக முன்வைத்தார். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நடைமேடையில் இயங்குவதே வழக்கமான நடைமுறை. மனிதாபிமான அடிப்படையில் ஆட்டோக்களுக்கு இடம் அளிக்கப்பட்டாலும், அது சிற்றுந்துகளின் செயல்பாட்டைப் பாதிக்கக் கூடாது. பெரியார் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் இருப்பது போல, இங்கும் முறையான ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதிகாரிகள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். குறிப்பாக, சிற்றுந்துகளுக்குச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்தது.
நேர மேலாண்மை: பேருந்து நிலையத்தில் வாகன நெரிசலைக் குறைக்க 10 நிமிட கால இடைவெளி அடிப்படையில் வாகனங்களை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சிற்றுந்துகள் வழக்கமான நடைமேடைகளில் இயங்குவதை உறுதி செய்யவும், ஆட்டோக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் மாற்று இடங்களை முறைப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.சிற்றுந்து உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதோடு, போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இரு தரப்பினரும் சுமூகமாக இணைந்து செயல்படச் சம்மதம் தெரிவித்தனர்.
இந்தத் தீர்வின் மூலம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிலவி வந்த பதற்றம் நீங்கி, பயணிகளுக்கு இடையூறு இல்லாத போக்குவரத்து சேவை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது