மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் நோக்கில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 01.06.2026 முதல் 30.06.2026 வரை மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த காலகட்டத்தில் மொத்தம் 6,616 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 45 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தனியாக மேற்கொண்ட ஆய்வில் 15 கடைகளிலும், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொண்ட கூட்டு ஆய்வில் 6 கடைகளிலும், காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட 24 வழக்குகளிலும் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டன. இந்த ஆய்வில் விதிமீறலில் ஈடுபட்ட 39 கடைகள் மூடப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.13,25,000/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறையின் கூட்டு ஆய்வுகள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்ட சோதனைகளில் 85.075 கிலோ, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொண்ட கூட்டு கூட்டு சோதனைகளில் 30.045 கிலோ, காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட 24 வழக்குகளில் 9.165 கிலோ என மொத்தமாக 124.285 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
மேலும், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்கும் நடவடிக்கைகள் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் அறிந்தால், உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அல்லது காவல்துறைக்கு தகவல் அளித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
.