மதுரை மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக வெளியாகியுள்ள சில குற்றச்சாட்டுகள் குறித்து நம்மிடம் விளக்கம் அளித்துள்ள தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள், சமீபத்தில் வெளியான ஒரு செய்தியின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பொறியாளர் மனுதாரரை தனித்தனியான மனுக்களை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியதை சிலர் தகவல் மறைப்பாக சித்தரித்து வரும் நிலையில், அது சட்டப்பூர்வமான நிர்வாக நடவடிக்கையே என தகவல் அறியும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து அவர்கள் கூறும் போது,தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் முக்கிய நோக்கம் அரசுத் துறைகளின் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதாகும். அதே நேரத்தில், தகவல் கோரும் நபர்களும் தகவல்களை தெளிவாகவும் குறிப்பிட்ட வகையிலும் கோர வேண்டும் என்பதையும் சட்டம் வலியுறுத்துகிறது.
மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் 2020 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள், அனுமதிகள், ஆய்வுகள், கண்காணிப்பு அறிக்கைகள், நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் ஒரே மனுவில் கோரப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய விரிவான தகவல்களை ஒரே நேரத்தில் திரட்டி வழங்குவது தொடர்புடைய பல பிரிவுகளின் பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டிய சூழலை உருவாக்குகிறது.
"ஒரே மனுவில் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் மற்றும் பல ஆண்டுகளுக்கான பதிவுகளை கோரும்போது, அவற்றை சேகரிப்பதற்கே கணிசமான மனிதவளம் மற்றும் நேரம் தேவைப்படுகிறது. இதனால் அலுவலகத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே தகவல்களை தலைப்பு வாரியாகவும், பொருள் வாரியாகவும் பிரித்து கோருமாறு மனுதாரரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையமும் மாநில தகவல் ஆணையங்களும் வழங்கிய பல தீர்ப்புகளில், "அதிக அளவிலான மற்றும் பொதுவான தகவல் கோரிக்கைகள் நிர்வாகச் செயல்பாடுகளை முடக்கக் கூடாது" என்று வலியுறுத்தப்பட்டுள்ளன. தகவல் அதிகாரிகள் தகவலை மறுக்காமல், கோரிக்கையை நடைமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்க மனுதாரர்களை அறிவுறுத்தலாம் என்றும் தீர்ப்புகள் கூறுகின்றன.
சுற்றுச்சூழல் பொறியாளர் மேற்கொண்ட நடவடிக்கையும் இதே அடிப்படையில்தான் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல்களை மறுப்பதற்காக அல்லாமல், துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களை வழங்குவதற்காகவே தனித்தனி கோரிக்கைகளை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் அறியும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்ற தொழில்நுட்பத் துறைகளில் ஒவ்வொரு தகவலும் ஆய்வறிக்கைகள், ஆய்வக முடிவுகள், அனுமதி நிபந்தனைகள், கண்காணிப்பு பதிவுகள், சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் தொடர்புடையதாக இருக்கும். எனவே தகவல்களை வகைப்படுத்தி பெறுவது மனுதாரருக்கே பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
சட்ட வல்லுநர்கள் கூறுகையில், "தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது தகவலை வழங்குவதற்கான கருவி; நிர்வாகத்தை செயலிழக்கச் செய்வதற்கான கருவி அல்ல. தகவல்களை முறையாகப் பிரித்து கோருமாறு அதிகாரி அறிவுறுத்துவது சட்டத்திற்கும் நிர்வாக நெறிமுறைகளுக்கும் உட்பட்ட செயலாகும்" என தெரிவித்துள்ளனர்.
இதனால், சுற்றுச்சூழல் பொறியாளர் மேற்கொண்ட நடவடிக்கையை தகவல் மறைப்பு என கருத முடியாது என்றும், தகவல்களை சட்டப்படி, விரைவாக மற்றும் துல்லியமாக வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை பாதுகாத்து, பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்கும் பணியில் அதிகாரிகள் பலர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.