மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு மேற்கொண்டார்.
சமணர் மலை
மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், கீழக்குயில்குடி கிராமத்தில் அமைந்துள்ள சமணர் மலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் நேரில் ஆய்வு செய்தார்.
பேவர் பிளாக் (Paver Block) சாலை
இந்த ஆய்வின்போது, சமணர் மலைக்குச் செல்லும் பாதையில் பேவர் பிளாக் (Paver Block) சாலை அமைத்தல், போதுமான மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்துதல், மலையேறும் பாதைகளில் பாதுகாப்பு கருதி கைப்பிடித் தடுப்புகள் (Hand Rails) அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
கரடிப்பட்டி கிராமம் – பெருமாள் மலை
தொடர்ந்து, மதுரை மேற்கு வட்டம், கரடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் மலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருமலை நாயக்கர் அரண்மனை
அதனைத் தொடர்ந்து, திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் புதிய மின்னொளியுடன் கூடிய சிற்பக்காட்சிக் கூடம் அமைக்கும் பணி, மழைநீர் வடிகால் அமைத்தல், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வைகை ஆறு : ஏ.வி. மேம்பாலம் – குருவிக்காரன் சாலை மேம்பாலம்
பின்னர், மதுரை வைகை ஆற்றின் ஏ.வி. மேம்பாலம் முதல் குருவிக்காரன் சாலை மேம்பாலம் வரையிலான பகுதியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இத்திட்டத்தின் கீழ் எல்.இ.டி. (LED) அலங்கார விளக்குகள், மிதக்கும் பாலம், இசை நீரூற்று, நடைபாதை, பொழுதுபோக்கு பூங்கா, மலர்த்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா வசதிகளை ஏற்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) சித்தார்த் போகர்னா, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.