நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சித்ததை எதிர்த்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்த போரானது 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் பொறுப்புடன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதன் விளைவாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் முறையாக அமெரிக்கா - ரஷ்யா - உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெற்றது. பிப்ரவரி 1-ம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி மிகச் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்று டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள 20 சதவீத உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உடைய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ளார்.