டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் 2-ம் தேதி அதிகாலை இலங்கைக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் உலகக் கோப்பை தொடரையோ அல்லது இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தையோ பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. இதில் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி ஏ பிரிவில் இடம் பெறுள்ளது. இதே பிரிவில் போட்டியை நடத்தும் நடப்பு சாம்பியனான இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, பிப்ரவரி 2-ம் தேதி அதிகாலையில் உலகக் கோப்பை அணி கொழும்புக்குப் புறப்படுவதற்கான பயண ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே செய்துள்ளது. பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடர் முழுவதையும் இலங்கையில்தான் விளையாடுகிறது. எங்கள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த ஆட்டமும் இலங்கையில்தான் நடைபெறும். எனவே எந்த அடிப்படையில் முழு தொடரையோ அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டியையோ புறக்கணிக்க முடியும்?
விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்று பாகிஸ்தான் அரசாங்கம் எப்போதும் கூறி வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதை பாகிஸ்தான் எவ்வாறு நியாயப்படுத்தும்? என்றார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரியின் இந்தத் தகவலால் அந்த அணி டி 20 உலகக் கோப்பையையோ அல்லது இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தையோ புறக்கணிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.