மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வீசியதால் 160 ரோல்களை ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட ஆவின் நீல நிற பால் பாக்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற ரசாயன நெடி வீசியது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களிடமிருந்து பரவலான புகார்கள் எழுந்தன. குழந்தைகள் மற்றும் நோயாளிகள் தினம் பயன்படுத்தும் பாலில் இத்தகைய நெடி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சாத்தமங்கலம் ஆவின் பால் பண்ணை மற்றும் பல்வேறு விநியோக மையங்களில் அதிரடி சோதனை நடத்தி பால் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் பால் பாக்கெடுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பாலத்தின் பிலிம் பேப்பர் ரோல்களில் ஏற்பட்ட தரக்குறைபாடே இந்த ரசாயன நெடிக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தரமற்ற பிலிம் ரோல்களை சப்ளை செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் மற்றும் பால்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த தரமற்ற பிலிம் ரோல்கள் பயன்பாட்டில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டு தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகம் எவ்வித பாதிப்புமின்றி தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.