பழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு அதிரடி உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் விற்பனைக்குரிய பத்திரத்தை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுப்பதாக கூறி சிலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்திருந்தனர். விசாரித்த தனி நீதிபதி, 'சார்பதிவாளர் மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சொத்து விற்பனையை பதிவு செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார். 2026 ஜூலை, 6ல் தனி நபர்கள் இருவரது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மடத்தின் தக்கரான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் செயல் அலுவலர், உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு விசாரித்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். 'பத்திர பதிவு செய்தது செல்லாது' எனவும் உத்தரவிட்டனர்.