தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. கிட்டத்தட்ட இந்த அரசு பதவியேற்று இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முதல்வர் விஜய். குறிப்பாக அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க முதல்வர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் தர முடியாது என தைரியமாக சொல்லுங்கள் என மக்களிடம் தெரிவித்திருக்கிறார் முதல்வர் விஜய்.
இந்நிலையில் லஞ்சம் குறித்த புகார்களை வாட்ஸ்அப் வழியாக அளிக்க புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த ஆட்சியில் லஞ்சமோ, கமிஷனோ இருக்காது என தொடக்கத்தில் இருந்தே சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ப தற்போது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டிருப்பது, பொதுமக்களுக்கு புதுவிதமான நம்பிக்கையை அளித்துள்ளது. இதன்படி எங்கிருந்து வேண்டுமானாலும் வாட்ஸ்அப்பில் ஒரே ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பினால் போதும். அடுத்த நொடியே கடுமையான நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன்படி தற்போது லஞ்சம் குறித்து எளிதாக புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண் வழியாக லஞ்சம் குறித்த புகார்களை அளிக்கலாம்.
இதுதவிர்த்து dvac@nic.in என்ற இமெயில் முகவரியிலும் லஞ்சம் குறித்த புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம். 044 22321090, 044 22321085, 044 22310989 மற்றும் 044 22342142 ஆகிய தொலைபேசி எண்களிலும் லஞ்சம் குறித்த புகார்களை பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி அளிக்கலாம்” என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.