சென்னை: நேபாள வெள்ளத்தில் தமிழர்கள் சிக்கி உள்ள நிலையில் அவர்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கான உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

திபெத் எல்லையை ஒட்டி, நேபாளத்தின் வட பகுதியில் அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் ஓடும் கோஷி இன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திபெத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதில், வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 8 பேர் உயிரிழந்த நிலையில், 105 இந்தியர்கள் உட்பட சுமார் 300 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் நேபாள அரசு ஈடுபட்டு உள்ளது. அப்பகுதியில் மொபைல் சேவை, மின்சார வசதி ஆகியன துண்டிக்கப்பட்டு உள்ளன. நீர்மின் மற்றும் சூரிய மின்சார திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்த ஏஜென்சி ஒன்று 36 பெண்கள் உட்பட 57 பேரை ஆன்மிக சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. மானசரோவர் யாத்திரைக்காக அவர் சென்ற அவர்கள் இன்று திபெத்தில் உள்ள கைரோங் செல்ல இருந்ததாக தெரிகிறது.

இதனிடையே நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் நிலை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி,80690 09901, 80690 09900 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800 309 3793 என்ற இலவச எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.