சென்னை: காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த தொடரில் ஆடவருக்கான 65 கிலோ பளு தூக்குதல் எடைப் பிரிவில், இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி, வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
ராஜா முத்துப்பாண்டியின் இந்தச் சாதனையைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். தொடர்ந்து தனது சொந்த ஊர் திரும்பிய ராஜா முத்துப்பாண்டிக்கு பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை சிம்ரன், வீரர் ராஜா முத்துப்பாண்டியை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, ராஜா முத்துப்பாண்டி தனது காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் பெருமையுடன் காண்பித்தார். அப்போது அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை சிம்ரன் பாராட்டினார். பின்னர் சந்திப்பின் இறுதியில், ராஜா முத்துப்பாண்டி நடிகை சிம்ரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.