டெல்லி: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார் என சிஜேபி கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஜென் ஸீ கருத்தரங்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே கலந்து கொண்டார். அவரிடம் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தீப்கே தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். இதேபோல் நாட்டின் பிற மாநிலங்களிலும் குறிப்பிட்ட சில துறைகளில் முதலமைச்சர்களின் பணிகள் கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கேரள மாநிலத்தில் சுகாதாரத் துறையை சிறப்பாக வழிநடத்தியதற்காக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டத்தக்கவர் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில் கல்வித் துறையில் மேற்கொண்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் மற்றும் சிறப்பான பணிகளுக்காக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் பாராட்டியுள்ளார்.
இதனிடையே அபிஜித் தீப்கேவின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்கள் மூவரும் சிறந்த முதல்வர்கள் என்றால் மக்கள் அவர்களை புறக்கணித்தது ஏன் என பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி ஷெஹ்சாத் பூனாவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.