சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட ரயில்கள் இன்று முதல் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படுவதால் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தனித்தனி வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், புதிய நடைமேடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பல்வேறு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டன. மேலும், சென்னை எழும்பூர் மெட்ரோவை ரயில் நிலையத்துடன் இணைக்கும் பாதையும் மூடப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு சிரமங்கைளை பயணிகள் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில், பயணிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு இன்று முதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயில் இந்த அறிவிப்பால் பொதுமக்களும், பயணிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.