டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்த போது டெல்லி காவல்துறை எங்கே சென்றது? நாங்கள் வந்தவுடன் டெல்லி பயப்படுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதில் பல குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மத்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்திக்க டெல்லி சென்றுள்ளார். அப்போது திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத மேற்குவங்க மாநில மக்கள் சிலரையும் அவர் தன்னுடன் அழைத்து சென்றிருந்தார் . அவர்கள் டெல்லியில் உள்ள அந்த மாநில இல்லத்தில் தங்கியுள்ளனர்.

இதையடுத்து மேற்கு வங்க இல்லம் முன்பாக டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கு மம்தா பானர்ஜி கடுமையாக கண்டனம் தெரிவித்தார். பின்னர் மேற்குவங்க மக்கள் தங்கியுள்ள இடத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி அப்போது செய்தியாளர்களுடன் கூறுகையில்,

டெல்லி காவல்துறை என்ன செய்கிறது என்று பாருங்கள். நாங்கள் அவர்களை விமர்சிக்க மாட்டோம். ஏனெனில் அது அவர்களின் தவறு அல்ல. டெல்லி காவல் துறையினர் அடங்கிய ஒரு பேருந்து இங்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையருடன் நாங்கள் சந்திப்பு நடத்த வந்துள்ளோம். முறையாக அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிறகே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். 150 பேர் இறந்து விட்டனர். இறந்தவர்கள் என்று கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பலரும் இங்கு வந்திருக்கிறார்கள்.

டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்தபோது தில்லி காவல்துறை எங்கே சென்றது? நாங்கள் டெல்லி வந்தவுடன் டெல்லியே பயப்படுகிறது. நாங்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கான மக்களை இங்கு அழைத்துக் கொண்டு வந்திருக்க முடியும். எஸ்.ஐ.ஆர். பட்டியலில் இறந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 50 பேரை நாங்கள் இங்கு அழைத்து வந்திருக்கிறோம். டெல்லி காவல்துறையால் யாரையும் பாதுகாக்க முடியாது. டெல்லியில் இன்னும் ஒரு நில பிரபுத்துவ அமைப்புதான் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.