திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் தி.மு.க. குறித்து எப்படி திருக்குறள் எழுதியிருப்பார் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் நேற்று நடந்த த.வெ.க.வின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசியதாவது,

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்ந்திருக்கிறோம். நாம் மிகப்பெரிய கட்சியாக வளர கோடிக்கணக்கான மக்கள்தான் காரணம். உங்களை நம்பித்தான் நானும், நம் கட்சியும் இருக்கிறோம். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். 2017-க்குப் பிறகு, 2021-க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலைமையை மக்கள் யோசித்துப் பார்க்கின்றனர். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் இருந்த இடத்தில் இவர்களும் இருக்கிறார்களே என மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். எம்.ஜி.ஆரின் அனுபவம் தெரியுமா?

விஜய்க்கு என்ன அனுபவம் உள்ளது? எனக் கேட்கின்றனர். விஜய்க்கு என்ன அனுபவம் எனப் பேசுகிறவர்கள்தான் அன்று எம்.ஜி.ஆரையும் அப்படிதான் பேசினார்கள். மாபெரும் மக்கள் சக்தியாக நம் தலைமையில் ஒரு அணி, தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. தலையில் மற்றும் பலர். எத்தனை அணிகள் வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான த.வெ.க.வால்தான் முடியும். விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கின்றனர். தேர்தலில் ஒவ்வொரு வீட்டில் இருந்து ஒரு விஜய் வாக்களிப்பர். அன்று தெரியும் ஏன் விஜய்யை அழைத்தோம் என நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருப்பதை கருத்துக் கணிப்பு எடுப்பவர்கள் பார்க்கலாம். த.வெ.க. நகரத்தில்தான் இருக்கிறது, கிராமத்தில் இல்லை என பேசுபவர்கள் இப்படி டெஸ்ட் செய்து பாருங்கள். அம்மா, அப்பா, தங்கைகள், தம்பிகள் தவெகவுக்கு வாக்களிப்பதை யாராலும் தடுக்கவே முடியாது. கட்சித் தொண்டர்கள், அமைச்சர்களின் அட்ராசிட்டியை பார்த்து தூக்கம் வரவில்லை என முதல்வர் கூறியிருக்கிறார். விசில் சின்னத்துக்குதான் வாக்களிப்பேன் என தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டால் கூட முதல்வரே கூறுவார்.

திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் தி.மு.க. என்ற தீயசக்தி குறித்து திருக்குறள் எழுதியிருப்பார். அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு என திருவள்ளுவர் எழுதியிருப்பார். பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும். அதற்காக அவர்கள் செய்யும் தவறை சொல்லாமல் இருக்க முடியுமா? சொல்லிக் கொண்டே இருப்போம். மக்களின் ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான், நாம்தானே அவர்களை கேள்வி கேட்க முடியும். மக்களுடைய ஒரே பிரதிநிதி நாமதான். இவ்வாறு அவர் பேசினார்.