த கேரளா ஸ்டோரி -2 படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
த கேரளா ஸ்டோரி 2, கோஸ் பியாண்ட் என்ற படத்தை கமக்யா நாராயண் சிங் இயக்கி உள்ளார். இன்று வெளியாக இருக்கும் இப்படத்தில் உல்கா குப்தா, அதிதி பாடியா, ஐஸ்வர்யா ஓஜா முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் சில பெண்கள் சேர்ந்து இளம்பெண் ஒருவரைக் கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் கேரளாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்துக்குத் தடை விதிக்க கோரி கண்ணூரைச் சேர்ந்த தேவ் நம்பூதிரி என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பெச்சு குரியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறும் போது, மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி படம் எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை பரிசோதிப்பதற்காக படத்தைப் பார்க்கத் தீர்மானித்துள்ளேன். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இருப்பதாக மனுதாரர் அஞ்சுவதால் இப்படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லருக்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.