திருச்சி: திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டியில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் நலன் கருதி, அங்கு "பேருந்து நிறுத்தம்" (Request Bus Stop) அமைத்துத் தரக் கோரி தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், இளஞ்சிறார் நீதிக் குழுமம் மற்றும் குழந்தை நலக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான பி. பாண்டியராஜா இந்த மனுவினை அனுப்பியுள்ளார்.
மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள் மற்றும் காரணங்கள்:
மாணவர் எண்ணிக்கை: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சேதுராப்பட்டி பிரிவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்போது சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
போக்குவரத்து சிரமங்கள்: இந்தக் கல்லூரிகள் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. திருச்சி - விராலிமலை மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால், மாணவர்கள் உரிய நேரத்திற்கு கல்லூரிக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
பாதுகாப்பு அச்சம்: பேருந்து வசதி குறைவால் மாணவர்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன், பெற்றோர்களுக்கு கூடுதல் செலவினமும், மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் உருவாகிறது.
விடுதி மாணவர்களின் அவதி: கல்லூரியின் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், விடுமுறை நாட்களில் தங்களது புத்தகப் பைகள் மற்றும் உடமைகளைச் சுமந்து கொண்டு பேருந்து வசதியின்றி செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
எனவே, மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, மதுரை - திருச்சி மற்றும் திருச்சி - மதுரை ஆகிய இரு மார்க்கங்களிலும் செல்லும் பேருந்துகள் சேதுராப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல ஏதுவாக, அங்கு ஒரு " பேருந்து நிறுத்தம்" அமைத்துத் தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.