மதுரை நெல்பேட்டை பகுதியில் வசிக்கும் மாமன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) சையது அபுதாஹிர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் தொலைபேசி வாயிலாக ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மதுரை நெல்பேட்டை, காயிதே மில்லத் நகர் 7-வது தெருவைச் சேர்ந்த சையது அபுதாஹிர் மகன் சதாம் உசேன் (எ) முகமது சரிப் (36), மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது தந்தை சையது அபுதாஹிர் தற்போதைய மாமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முட்டைக்கோஸ் ஜாகிர் என்ற ஜாகிர் உசேன், கவுன்சிலர் அபுதாஹிர் மீது தீராத வன்மம் கொண்டு செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.


திமுக கூட்டணியில் கவுன்சிலர்'சீட்' (Seat) கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக, ஜாகிர் உசேன் என்பவர் கவுன்சிலர் அபுதாஹிர் மீது வன்மம் கொண்டுள்ளார். இதன் காரணமாக, யாதொரு ஆதாரமும் இல்லாமல் கவுன்சிலர் அபுதாஹிர் மீது தேவையில்லாமல் பல்வேறு அரசுத் துறைகளுக்குத் தொடர்ந்து பொய் புகார்களை அனுப்பி வந்துள்ளார் என்பது முதல் தகவல் அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.



கடந்த ஜூலை 3-ம் தேதி இரவு, 'சுங்கம் பள்ளிவாசல் ஜமாத்தார்கள்' என்ற வாட்ஸ்அப் குழுவில் கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி ஜாகிர் உசேன் அவதூறு பரப்பியுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட சதாம் உசேனுக்கு, ஜாகிர் உசேன் ஆபாசமான ஆடியோக்களை அனுப்பியதோடு, சதாம் உசேனின் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், சதாம் உசேனின் மாமனாரைத் தொடர்பு கொண்டும் தரக்குறைவாகப் பேசி மிரட்டியுள்ளார்.


பாதிக்கப்பட்ட சதாம் உசேன் அளித்த புகாரின் அடிப்படையில், விளக்குத்தூண் காவல் நிலைய சிறப்புச் சார்பு ஆய்வாளர் சந்தானம் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் **296(b)** மற்றும் **351(1)** ஆகியவற்றின் கீழ் ஜாகிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இது குறித்து ஆய்வாளர் செந்தில்குமரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.