அரியலூர்: “தமிழ்நாட்டில் இரு துருவ அரசியலை நிலைநாட்டும் முனைப்பில் தவெக உள்ளது. அதேநேரத்தில் திராவிடக் கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என சூது, சூழ்ச்சி அரசியலை பாஜக - ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது,” என திருமாவளவன் எம்.பி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விசிக தலைவர் திருமாவளவன் தந்தை தொல்காப்பியன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, தமிழக அமைச்சர் வன்னியரசு ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், “தமிழ்நாட்டில் இரு துருவ அரசியலை நிலை நாட்ட வேண்டும் எனும் முனைப்பு தவெகவுக்கு உள்ளது. ஆனால், திராவிடக் கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும். அதிமுகவை முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும் என பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. அதிமுகவை குறி வைத்துதான் அண்ணாமலையும் காய் நகர்த்தினார் அல்லது அண்ணாமலையை நகர்த்தி இருக்கிறார்கள். அதனால் தான் அவர் மேற்கு மாவட்டங்களை குறிவைத்து மாநாடு பொதுக்கூட்டங்களை நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஆதரவாக இருக்கக்கூடிய சமூகத்தின் வாக்கு வங்கியை, சமூகப் பின்னணியோடு தம் பக்கம் ஈர்த்துவிட்டால், அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தி செயலிழக்க செய்ய முடியும் என சங்பரிவார்கள் கணக்கு போட்டு அண்ணாமலையை பின்னிருந்து இயக்குவதாக நான் ஊகிக்கிறேன். முதலில் அதிமுகவை குறிவைத்து பலவீனப்படுத்துவது. பின்னர் திமுகவை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்துவது என்கின்ற சங்பரிவார்களின் சூது அரசியல், சூழ்ச்சி நிறைந்த அரசியல் அரங்கேறிக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். இந்த சூழ்ச்சி அரசியலில் தவெகவும் இணைந்துள்ளதா என்பது குறித்து தவெகவிடம் தான், நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
தவெக கூட்டணியில் பாமக இணைகிறதா என்ற யூகங்களின் அடிப்படையில் கேட்கும் கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் உறுதியாக உள்ளது என நம்புகிறோம். தமிழ்நாடு அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைவதாக முடிவு எடுத்தால், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. சபரிவர்மனின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முறை தொகுதி மறு வரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முறியடித்தோம். இந்த முறையும் அதனை நிறைவேற்ற விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மக்களவையில் இதனை எதிர்ப்போம் என்றார்.