2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், இதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளின் பரிந்துரைகளை அவர் கவனமாக கேட்டறிந்தார். மேலும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் இடம்பெறுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூலை 16) நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது: ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும். எனது தலைமையிலான அரசு வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாவர்கள் என பார்க்கமாட்டேன், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊழல் முறைகேடுகள் இருக்க கூடாது. பள்ளிகளில் ரீல்ஸ் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. விதிகளை மீறுவோர் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை பாயும். இவ்வாறு அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.