ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து சென்றனர். சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு சென்றார். அங்கு நின்றபடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், அனைத்து உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அவருக்கு வலதுபுறம் போடப்பட்டிருந்த இருக்கையில் சபாநாயகர் மு.அப்பாவுவும், இடது புறம் போடப்பட்டிருந்த இருக்கையில் கவர்னரின் செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமாரும் அமர்ந்தனர்.

சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்கினார். பொதுவாக, கவர்னர் உரை நேரலையாக வழங்கப்படும். ஆனால், நேற்று நேரலை வழங்கப்படவில்லை. இந்த நிலையில், சட்டசபையில் பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து, 4-வது ஆண்டாக அவர் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.