நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அவர் அ.தி.மு.க.வில் இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் பெண் முகமாக பரீட்சயமானவர் காளியம்மாள். இவர் அந்த கட்சியில் இருந்த போது தமிழ் தேசியம், தமிழ் மண் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதித்திருந்தார். மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால் காளியம்மாள், கட்சி செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். சீமானும் அவருடைய தம்பிகளும் காளியம்மாளை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதையடுத்து கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகிய அவர் ஏதாவது ஒரு இயக்கத்தை தொடங்குவார், அல்லது ஒரு கட்சியில் இணைவார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தது பேசுபொருளானது. இதனால் அவர் பா.ஜ.க.வில் இணைகிறார் என தகவல்கள் கிடைத்தன. ஆனால் அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தாகவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு த.வெ.க.வில் ஆதவ் அர்ஜுனாவும் நிர்மல் குமாரும் இணைந்த போது காளியம்மாளும் பனையூர் அலுவலகத்திற்கு செல்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் காளியம்மாள் இந்த செய்திகளை மறுத்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக எந்த கட்சியில் இணையலாம் என த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளிடம் காளியம்மாள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதில் அ.தி.மு.க.வுக்கு செல்வது என முடிவெடுத்து இன்று அக்கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.