சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நாடு முழுதும் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. நடப்பாண்டுக்கான 'நீட்' தேர்வு, கடந்த மே, 3ம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிவு புகாரால், பின்னர் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் மறு தேர்வு, கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது. இந்த தேர்வை, 19 லட்சத்து, 99,895 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியாகின. தேர்வெழுதிய மாணவர்களில், 11 லட்சத்து 21,185 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், மாணவர்கள் 4 லட்சத்து 67,134 பேர்; மாணவியர், 6 லட்சத்து 54,049 பேர்; மூன்றாம் பாலினத்தவர் இருவர். தேசிய தர வரிசையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆர்யன் குப்தா முதலிடம் பிடித்தார். முதல், 100 இடங்களில், தமிழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பெண்கள் அளவிலான பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீனிகா தேசிய அளவில், 7வது இடம் பிடித்துள்ளார். மாநில அளவில் விழுப்புரத்தை சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை டாக்டர் அஞ்சன் ராமச்சந்திர நாத்தின் மகன், வெங்கடபதி வேலாயுதம் முதலிடம் பிடித்துள்ளார். இவர், 'நீட்' நுழைவுத் தேர்வில், 720க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார்.
நடப்பாண்டு, மருத்துவ படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் அதிகரிக்கும் என, கல்வியாளர்கள் கூறுகின்றனர். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், ''நடப்பாண்டு, மருத்துவ படிப்புக்கான கட் - ஆப் மதிப்பெண் உயரும். ''கடந்த முறை, 690 மதிப்பெண்களுக்கு மேல் யாரும் இல்லை. நடப்பாண்டு, 690க்கு மேல், 85 மாணவர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு, 600க்கு மேல் 1,663 மாணவர்கள் இருந்தனர். ''நடப்பாண்டு, 9,865 மாணவர்கள் உள்ளனர். அதனால், கட் ஆப் மதிப்பெண் உயரும். 30 முதல் 40 மதிப்பெண்கள் வரை கட் - ஆப் அதிகரிக்கும்,'' என்றார்.