புதுடெல்லி: தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது.


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி கூட உள்ளதை முன்னிட்டு அன்றைய தினம், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளிக்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை சோனம் வாங்சுக்கை டெல்லி போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி டெல்லி சாஃப்டர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையை சுற்றி காவல்துறை, துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதனிடையே ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தான் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “நான் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன். இங்குள்ள யாரும் பின்வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் இன்னும் பெரிதாக வளரும். சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்தி அவர்கள் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளனர். எல்லோரும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு திரும்புங்கள். நமது இயக்கம் இங்கிருந்து வளரட்டும், ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பயணம் திட்டமிட்டபடி நடக்கட்டும்” என்று அறைகூவல் விடுத்துள்ளார்.