திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு 1.35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமையாளர்கள் என்ற பெயரில் திண்டுக்கல் மாவட்டம் டி.கே.என்.புதுார் சேதுபதி, திருப்பூர் மாவட்டம் பாப்பாகுளம் வெள்ளத்துரை வேறு ஒருவருக்கு நிலத்தை விற்க முயன்றனர். சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி சார்பதிவாளர் விற்பனை பத்திரப்பதிவுக்கு மறுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக துறைரீதியாக பழநி நிலை-1 சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டை சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் அதிகாலை 4:00 மணி முதல் சி.பி.சி.ஐ.டி.அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுபோல், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி.அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.