தமிழகத்தில் பால் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளன. ஆரோக்கியா நிறுவனம் கடந்த 21-ம் தேதி பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தி உள்ளன. டோட்லா, ஜெர்சி உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பால் விலையை உயர்த்தி வருகின்றன.
கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் 76 ரூபாயிலிருந்து 78 ரூபாய் ஆகவும், டீ ஸ்பெஷல் பால் 68-ல் இருந்து 70 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் 66 ரூபாயில் இருந்து 68 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் 60 ரூபாயில் இருந்து 62 ஆகவும் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 48 ரூபாயில் இருந்து 50 ஆகவும் உயர்ந்துள்ளது. இதே போல தயிர் ஒரு கிலோ ரூ. 74-ல் இருந்து 76 ஆகவும் 450 கிராம் தயிர் ரூ. 38-ல் இருந்து ரூ.40 ஆகவும் இரு முறை சமன்படுத்தப்பட்ட தயிர் ஒரு கிலோ ரூ. 70-ல் இருந்து 72 ஆகவும் உயர்ந்துள்ளது.
தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழகத்தில் பால் உற்பத்தி குறைந்தது காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்கின்றன. இதன் காரணமாக பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.