தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் பா.ஜ.க.வில் இருந்து சிலர் அமைச்சர்களாகவும் வருவார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

சென்னையில் பா.ஜ.க. தேர்தல் பணிமனை திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் பா.ஜ.க.வில் இருந்து, 20 - 30 பேர் எம்.எல்.ஏ.க்களாக வருவார்கள். சிலர் அமைச்சர்களாகவும் வருவார்கள். அமைச்சராக வருவதற்கு வி.பி. துரைசாமி ஆசிர்வாதம் வாங்கி விட்டார். இறைவன் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும் என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து விட்டு சென்ற பிறகே தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் பிடிவாதம் காட்டவில்லை என்று பதில் அளித்தார். அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் பேச்சால் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.