தஞ்சாவூரில் நாளை (மார்ச் 4) விஜய் பங்கேற்கும் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிர்வாகிகள் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளைத் த.வெ.க. தலைவர் விஜய் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 4 ஆயிரத்து 900 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்பார்கள் என்றும் இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, கியூஆர் கோடு ஸ்கேன் செய்து திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தஞ்சை த.வெ.க நிர்வாகிகள் கூட்டத்துக்கு அனுமதி கோரி, மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் த.வெ.க. மத்திய மாவட்டச் செயலர் விஜய் சரவணன் உள்ளிட்டோர் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.