சென்னை: தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் தற்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரிந்த பிறகுதான் அவர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும். பழநி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை. இந்த விசாரணை விரிவடைய வேண்டும். இதில், பலர் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக நாங்கள் கருதுகிறோம். பழநியில் மட்டுமல்ல பல இடங்களில் போலி பத்திரப் பதிவு சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்துள்ளதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே, இது தொடர்பான விசாரணை விரிவடைய வேண்டும். குற்றமிழைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரப் பதிவு மோசடி தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தவெக அரசு வந்த பிறகுதான் இதில் நடந்துள்ள மோசடிகள் குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியை திமுக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ரூ.40 கோடி, ரூ. 50 கோடி கொடுத்து எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த முயற்சி தொடர்பாக ரூ.2 கோடி ரூபாய்க்கும் மேலாக ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதில் வெற்றி பெறுவதன் மூலம், இந்த அரசை பதவி நீக்கம் செய்ய அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.