ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தை ‘கிடா’ படத்தை இயக்கிய ரா.வெங்கட் இயக்குகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் குமார் தயாரிக்கும் இப்படத்துக்குச் சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.
அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. “மதுரை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘தெனாவட்டு ’ திரைப்படத்துக்குப் பிறகு, கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படம் இது. அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான படைப்பாக இப்படம் அமையும்” என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.