ஆஸ்திரேலியா, சீன நிறுவனங்களுடன் தமிழக அரசு ஆலோசனை – புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு


சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராஃபைட் தாதுவை மதிப்புக்கூட்டப்பட்ட தொழில்துறை மூலப்பொருளாக மாற்றும் நோக்கில், தமிழ்நாடு அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) மூலம் கிடைக்கும் சுமார் 96 சதவீத தூய்மையுடைய கிராஃபைட் தாதுவை, 99.5 சதவீத தூய்மையுடைய எலக்ட்ரோடு தர கிராஃபைட்டாக மேம்படுத்திச் சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, அவற்றின் மதிப்பை உயர்த்துவதுடன், தொழில்துறை வளர்ச்சியையும் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


இதுதொடர்பாக, மின்சார வாகனங்களுக்கான (EV) பேட்டரிகள், மின்சார மற்றும் மின்னணுக் கூறுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளுக்குத் தேவையான கிராஃபைட் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆஸ்திரேலியா மற்றும் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.


தற்போது தொழில்துறைப் பயன்பாடுகளுக்குத் தேவையான உயர்தர கிராஃபைட் பொருட்களின் உற்பத்தியை உள்நாட்டிலேயே மேற்கொள்வதன் மூலம், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையைப் படிப்படியாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிராஃபைட் தாதுவை மூலப்பொருளாக விற்பனை செய்வதற்குப் பதிலாக, அதனைச் சுத்திகரித்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதன் மூலம் கூடுதல் பொருளாதாரப் பலன்களைப் பெறவும் வாய்ப்புள்ளது.


இத்திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், சிவகங்கை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய தொழில்துறை முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், உள்ளூர் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழ்நாடு அரசின் வருவாயை அதிகரிப்பதற்கும், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுத் தொழில்துறைகளுக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும் இம்முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தக் கலந்தாய்வின்போது, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு மற்றும் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) மேலாண்மை இயக்குநர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.